Monday, October 27, 2014

இளங்காலை பயணங்கள் :

நடுநிசியை  நனைத்த மழை
தீர்ந்து விட
விடிய துவங்கும்
இளங்காலை..!

“ எங்கு செல்கிறோம் .. கோவிலுக்கா ?”இவர்
  “ நகர்வலம் .. “ என்கிறேன் நான் .

சிலுசிலுக்கும் குளிர்காற்று
முகம் மறைக்க
இருசக்கர வாகனத்தில் நாங்கள் ..

ஈரக் கூந்தல் சொட்ட சொட்ட ..
தோள் பற்றி ...

ஆற்றுப் பாலம் கடக்கையில்
விலகும் இருளில்
ஒளிரத் துவங்கும் கதிர்..

எழிற்கோலம் எழுதும்
இனிய வானம் ..

தாரைகள் தரையிறங்க
மிச்சம் கவிழும்
மழைப் பருகி விரைகிறோம்
நாங்கள் ..


# நினைவுகள் தொடர்கதை ..!
நட்ட நடு இரவில்
நெற்றிப் பொட்டில்
பட்டுத் தெறித்தது
ஒற்றைத் துளி !
“அம்மா மழை “ என்றேன்.

அம்மா
அப்பாவை எழுப்ப
அடுக்களைப் பாத்திரமெல்லாம்  
இடம் பெயர்ந்தன .
காலருகே , தலையருகே
வலமும், இடமுமாய்
தலை விரித்த குடைகளென
மழை ஏந்தின

“ அடுத்த மழைக்குள்
ஓடு மாற்ற வேண்டும் “
இது அப்பா.
“ஐந்து மழைக்காலமாய்
மாறாத பேச்சும்
மாற்றாத ஓடுகளும்  “
என்பாள் அம்மா .

கன்னத்தில் நீர் தெறிக்க
நேற்றிரவு 
கணவரை எழுப்பினேன்.
“நாளை ஏசி பழுது பார்க்க
ஆளை அழைக்கிறேன் “ என்றார்.


மாறித்தான்  போனது வாழ்க்கை !