Sunday, June 16, 2013

Way to Man's Heart.!

" Way to Man's heart is through his stomach" என்ற கருத்தில் உடன்பாடு
இருப்பவர் மேலே தொடருங்கள்.

இல்லையேல் அடுத்த நிலைத் தகவல் படிக்க இதைக் கடந்து விடலாம்.

"சமையல் " பெண்களின் உரிமை என்னும் தலைமுறையைச் சார்ந்தவள்.

ஆனால் திருமணம் வரை புத்தகமும் , கையுமாய் இருந்ததால் அன்று வரை என் சமையல் அறிவு சூன்யம்.

பின் தோழிகளிடம் , சகோதரிகளிடம், சித்தி, அம்மா , பாட்டி என தெரிந்தவர்கள் எல்லாரிடமும் நோட்டும் கையுமாய் உட்கார்ந்து ஒரு வழியாய் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.

பிள்ளைகள் வளர , வளர இதில் பெரிய ஈடுபாடு வந்தது.

இந்த வரலாறு , பூகோளம் தவிர்த்து விடலாம்.

இப்போது ஓரளவு செய்கிறேன் என கருதுகிறேன்


அதற்கான ஒரு சின்ன டிப்ஸ் இங்கு. ..

என் வழி " மனதால் சமைத்து பார்த்து விடுதல்" அதாவது
"Cooking With the Mind"

எடுத்துக் காட்டாக நாளை காலை சமையல் இவை என் வைக்கலாம் .
"மிளகுப் பொங்கல், சட்னி
எண்ணெய் கத்தரிக்காய், கோஸ் பொரியல், ரசம், தயிர் சாதம் "

(காலையிலே இரண்டு வேளை சமையலும் நடக்கும், விடுமுறை நாட்கள் தவிர்த்து..)

முந்தின இரவு இதற்கான பொருட்களை இருக்கிறதா என பார்த்து
விடுவோம்.

அதன் பின் இந்த உணவுகளை மனக்கண் முன் கற்பனை செய்வேன் இப்படி.

மிளகும் முந்திரியும் விழித்துப் பார்க்கும் பொங்கல்.
வெள்ளை வெளேர் தேங்காய் சட்னி.
எண்ணெயில் சிரிக்கிற கத்தரிக்காய்
தேங்காய் பூ சூடிக் கொண்ட பொரியல்..
தெள்ளத் தெளிவான ரசம்
இஞ்சி, கொத்துமல்லி, கேரட் அலங்காரமாய் கொண்ட தயிர் சாதம்.

இப்படி முன்னிரவு மனக் கண்ணில் கண்ட உணவை
காலையில் சின்னதாய் பாடிக் கொண்டோ (!)
பாடல் கேட்டுக் கொண்டோ சமைத்து விடலாம், சுலபமாய்.

சமையலும் கவிதை போலத்தான்
கற்பனைக்கு எல்லையே இல்லைதான்

பின் குறிப்பு; இப்படி சமையல் முடித்தப் பிறகு தான் காமெடி இருக்கு. !
பிள்ளைகள் " இன்னும் கொஞ்சம் ' innovative, imaginative, colourful, tasty ஆக செய்ய கூடாதாம்மா / " என்பார்கள். இருக்கிற அத்தனை adjectives அடுக்குவார்கள் . சமாளித்தாகனும்.!

பயணங்கள்

பயணங்களில் 
ஏனோ நான்
உறங்குவதில்லை..!

பேருந்தில் சக பயணி 
தோளில் சரிய
மெல்ல விலக்கி விட்டு
உறங்கி விழும் முகங்களை
வேடிக்கை பார்ப்பதுடன் சரி.!

கணவரோ, பிள்ளைகளோ , ஓட்டுனரோ
மிதமான வேகத்தை
அறிவுறித்திக் கொண்டே செல்வேன்
கார் பயணங்களில்
உறக்கமில்லை. !

இரவுப் பயணம் ..
ரயிலின் தாலாட்டு
தூங்க வைப்பதில்லை.!

ஆனால்..
அப்பாவை இருகரத்தால்
பிடித்துக் கொண்டு
பின் இருக்கையில்
அமர்ந்தவுடன்
உறங்கி விழுந்ததும்

" தூங்க்காதமா" எனப்
பேச்சு கொடுத்து கொண்டே
ஒருகையால் என்னைப் பற்றி
சைக்கிளில் சென்றதும் ....
மட்காத நினைவுகளாய் .....
மனம் முழுக்க..மனம் முழுக்க.!

பரிணாமம்.

டாம் அண்ட் ஜெர்ரி..
டின் டின்...!
சிலந்தி மனிதன்..
விண்வெளி வீரர்..

பொன்மொழிகள் ...!
மோட்டர் பைக் .. கார்..

நடிகர் விஜய் படம்..!!
இன்று சே குவெரா ??

மாறும்
அறையின் படங்கள்...
மகனின்
பரிணாம வளர்ச்சி..!

அம்மா.!

அம்மா !
ஒற்றைச் சொல் உலகம்.
என் அம்மா திரேசம்மா என்றழைக்கைப் படும் திரேசா அருள்மணி.
எளிய குடும்பம். 
எதையும் இறைவன் கையில் ஒப்படிக்கும் அமைதியான அப்பா.
பெரிதாக ஆசைகளோ , கவலைகளோ இல்லா நீரோடை.!
ஆனால் அம்மா ?
கடல்!

கல்வி , திறமைகள் வளர்ப்பு ,
சமுக த்தில் சிறந்த இடம்.
சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டோம்.
இந்த உயரங்கள் , அம்மாவின் கனவும், தியாகமும்..

ஒரு கையில் அம்மா.
மறு கையில் புத்தகம்-என்
கணவர் கை பிடிக்கும்நாள் வரை.

அம்மா எனில்
கேட்கும் வரை காத்திருக்காமல்
ஓடி சென்று உதவும் குணம்.
அறிவால் ஆய்ந்து
அன்பால் முடிவெடுக்கும் திறன்.
உழைப்பே இன்றும் மந்திரம்.

காட்டன் சேலையும் ,
கதைப் புத்தகங்களும் உயிர்.
மணியன் கதைகளை மனப்பாடம் செய்தவர்.!

ஒரு புத்தகத்துக்கான செய்தி இருக்கு.
எதை சொல்ல , எதை விட.?

அம்மாவிடம் கற்றதை
மகளுக்கு கற்று தருகிறேன்.
" இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் "
தாய்மை உள்ளம் கொண்ட அனைவருக்கும்..!

அழகிய தருணங்கள்..!

சற்று தாமதமான பதிவு..
**********************
மகள் திருமண வரவேற்பின் போது புத்தகம் நினைவாக
தரலாம் என்று முடிவு செய்தது என் வீடு.

என் கவிதைகளையே தொகுத்து தரலாம் என்றதும்
அது கை தட்டி வரவேற்றது..
திருமண பட்ஜெட்டில் முதல் செலவாய்
"அம்மாவின் கவிதைத் தொகுப்பு" செலவு எழுதப்பட்டது.!

அதன்பின் ஒரு கூட்டு முயற்சியாய் பிறந்தது இத்தொகுப்பு.
கவிதைகளை தேர்ந்தெடுத்து, கணினியில் அடித்து ,ப்ரிண்ட் எடுத்து
எல்லாமே கணவரும், மகளும் பார்க்க , நான் வழக்கம் போல் ஜாலியாய் இருந்தேன். " அழகிய தருணங்கள்" இப்படி பிறந்தது.

இறுதிவரை ஆயிரம் திருமண வேலைகளுக்கிடை இதை கொணர்ந்தார் இவர். ! வரவேற்பில் எங்கள் GM வெளியிட்டார்.

இந்த 6 மாத காலத்தில் இந்த புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பு...
மிக மிக எளிமையான் கவிதைகள் தாம். ஆனால் கொடுத்த தருணம் லயிக்க வைத்தது.

அலுவலகத்தில், வெளியில், திருமணம் போன்ற விசேடங்களில், உறவினர் மத்தியில் . ஆலயம் சென்று திரும்புகையில் ,யாரேனும் என் கவிதையை பற்றி சொல்வார் . மிகுந்த நெகிழ்ச்சியாய் இருக்கும். WORKSHOP, OFFICIAL MEETING போது கூட இது நிகழும். தொலைபேசி அழைப்புகள் கணக்கில் தரவில்லை

என் ஓய்வு பெற்ற மாமா 4 பக்கத்திற்கு கவிதைகளை கவிதையால் பாராட்டி இருந்தார்.

முன்னுரையில் சொன்னது போல ...
" கல்வியும், குண நலன்களும் தாய் வீட்டுப் பெருமையாய்
எடுத்துச் செல்லும் மகளுக்கு இந்த கவிதைகளும் சீதனம்."

எனக்கோ, இங்கு வந்து வாழ்ந்ததெற்கென "ஒரு அடையாளம். "
 —

எந்தன்

என்று சொன்னேன் நினைவில்லை
எனக்கு பொம்மைகள் பிடித்தம் என்று,,?

ஐம்பதை தாண்டிய பிறந்த நாளிலும்
எனக்கான பரிசு பொம்மைகள்

தடுத்தால் கேட்காத கணவர்
அவருக்கேற்ற பிள்ளைகள்
அதனால்
சின்னச் சின்ன காரணத்திற்கும்
என்னைத் தேடி வரும் ஒரு பொம்மை .

சட்டைக்கார பார்பி
பட்டுசேலை அழகி
உயர் பட்டம் நான் வாங்கியதும்
சத்தம் போட்டு படிக்கும் குழந்தை..!

புன்னகை சிந்தும்
கண்மணிகள்.. .இவர் ..
சொல்லும்
கதைகள் தனித்தனி !

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
இடைஇடையே பொம்மைகள்
இன்னும் குழந்தமை மாறா
எழிலோடு , அழகோடு
எந்தன் வீடு.
 —

ஒற்றைச்சொல்..

அறிமுகப் படுத்திக் கொள்கிறேன் ..
அன்றி 
அறிமுகப் படுத்தப் படுகிறேன்..
ஒவ்வொரு முறையும் ..
என் சுய விவர த்துடன் தான் .

ஏதும் இல்லை எனினும்
என் துறை பற்றியேனும்...
என் பணி பற்றியேனும்..
எப்படி இழப்பது அடையாளங்களை .?

மகளின் மருத்துவமனையில்
இன்று அறிமுகம் செய்தாள் .
" அம்மா "
அடையாளம் இல்லா அறிமுகம் !
ஒற்றைச் சொல்லில் ...

முதல் முறையாய் பிடிக்கிறது.