Saturday, January 3, 2015


நட்பு
அன்பு
காதல்
கடமை
அர்ப்பணிப்பு 

இன்ன பிறவற்றின்
நிறங்கள் எல்லாம்
உணர்ந்தே
அறிதல்
உன்னதம் ..!

உளதென
நிறுவுதல்
பெருந்துயர்..!!
வட்டமிட்டு வட்டமிட்டு
குட்டிக் கரணம் 
போடும் சின்ன முயல்..

மூக்கில் வைத்த பந்தை 
முட்டித் தள்ளும்
டால்பின்

எட்டுக்கொரு
முட்டையிட்டு
எகிறி செல்லும்
ஆங்ரிபேர்ட் .

மெட்டு போட்டு
மேளம் கொட்டும்
குரங்கு

T .வடிவில்
தலையாட்டி
விரையும் நாய் குட்டி

சுவரில் மிதக்கும்
வண்ண மீன்கள்.

மழு மழு
வழுக்கையுடன்
அடிவாங்கும்
கட்டம் போட்ட
சட்டைப் பையன் ..

காற்றுப் போன
சோட்டா பீம்

இன்னும் சில
நண்பர்களுடன்
களைப்பின்றி, சலிப்பின்றி
இயங்கும்
"ரியாவின் " உலகம் 


தலைக்கு மேல் 
கூரை இன்றி 
வெளியிடம்
உறங்கும் உயிர்களை 
துரத்தி துரத்தி 
அடித்திருக்கும் ..
நள்ளிரவில்
நகர் வலம்வந்த
கனமழை..

உடன்
இளகிய மண்ணும்..

உள் துடித்து
மருகிடும் மனமும்..!

அரைக்கையும் இல்லை
முழுக்கையும் இல்லை 

முழங்கை வரை தைத்து
மடித்து மடித்து
அரைக் கையாய்
ஏற்றிய சட்டை..

அணிந்தவரைத் தேடுகிறேன்
அப்பாவின் நினைவில்
கப்பலில் பயணிக்கும்
யோகம் வாய்க்கினும்
அலை நடுவே
தெப்பத்தில் ஏறி
தடுமாறி வீழ்தல் 
......வாழ்வென்பது..

கரிய முதலைகள்
கால் பற்றி
இழுக்கையில்
விரலிடை
நழுவும்
சிறு சிறு மீன்களுக்காய்
அழுது அரற்றுதல்
........வாழ்வென்பது.

கைக்கெட்டும்
தொலைவில்
கண் சிமிட்டும்
முத்துக்களை
புறக்கணித்து
கால் கடுக்க
சிப்பிக்கென
உழன்று வருந்துதல்
.......வாழ்வென்பது
# வாழ்வென்பது..

சீக்குப் பிடித்த சேவல்
காற்தடமென 
வளைந்த வரிகளும் 
நெளிந்த எழுத்தும் 
பால்யத்தில் ..

“ முத்துக் கோர்த்தது
போல எழுது ”
முட்டி மடிக்க
விழுந்த அடிகளில்
வளைந்த விரல்கள்
நடனமிட, நடனமிட
நளின அழகில்
மிளிர்ந்து ஒளிரும்
இளமை எழிலெனவே

வயதின் முதிர்வு நெருக்கிட
தளர்ந்து
கலைந்து
தனித்துவம் தொலைத்து
வாழ்க்கைக் களைப்பில்
இன்று
கம்பீரம்
களைந்ததென்
கையெழுத்து.

தொலைநோக்கு 
தவறுகையில்
உள் நோக்கி 
அங்கொளிரும் 
இறை வழி 
ஒளி பெறுவேன்.
****************


புலன்கள்
புலப்படுத்தா 
அப்பேரன்பின்
ஆழங்கள் ...!
அறிந்துணர்வதே
பிறவிப் பயன் !!

***********************