Sunday, July 21, 2013

இனிய ஞாயிறு

இன்னும் கொஞ்சம் உறக்கம்.
இன்னும் கொஞ்சம் முகநூல் ...
இன்னும் கொஞ்சம் நல்ல சமையல்..
இன்னும் கொஞ்சம் இறை வேண்டல்...

இன்னும் கொஞ்சம் ஒய்வு...
இன்னும் கொஞ்சம் சிரிப்பு ..
இன்னும் கொஞ்சம் இசை..

நாளை ஊறும் புது உணர்வில்
நகர்ந்து விடும் ஒரு வாரம் !

இலக்குகள் இல்லா
இனிய ஞாயிறு வாய்க்கட்டும் .



இறுக்கும் தளைகள்
சற்றே நழுவட்டும்...

இனிய உறக்கம்
இமைகள் தழுவட்டும்..

உழைப்பின் களைப்பு
உடல்தான் மறக்கட்டும்

உணர்வில், உயிரில்- புது
உற்சாகம் பிறக்கட்டும்.

சிறு சிறு மகிழ்வில்
நெகிழும் மழலை போல்
கவலைகள் தொலைத்த
ஞாயிறு
களிப்புடன் சிறக்கட்டும்...!

இனிய காலை வணக்கம்.

கழுவில் ..!

சாதி தனை சாகடித்து
சாதிக்க வேண்டியவர்
பாதியிலே போனதென்ன ?

சந்திக்கு வந்த வழக்கு
முடிவறியாது
சடுதியில் போனதென்ன ?

அழகான வாழ்விருக்கு
அனுபவிக்காது
இங்கு
அழவைத்துப் போனதென்ன?

இன்னும் எத்தனை
இளவரசர்களை
கழுவில் ஏற்றப் போகிறோம்?

மடிக் கணினி

இடைவிடாமல் 
சிணுங்கும் குழவி..
எடுத்தணைக்க நீண்ட கரங்கள்...

கொஞ்ச நேரம் 
கொஞ்சுகையில்
கொதிக்க துவங்கியது அடிமடி..!

# மடிக் கணினி

உறைந்த கணங்கள்..

அற்புதங்களின் கருவூலம்
அன்பும், மகிழ்வும் ததும்பும் 
அழகிய தருணங்கள்....
சுமக்கும் புகைப்படங்கள் 

உறைந்த கணங்கள்
உயிர் பெறுகையில்
கவிதையாய் மனதில் நிறையும்..
கதைகள் நூறு சொல்லும் ..

நினைவைக் கலைக்கும்,
விழிகளில் நீர் சுரக்கும்.

வளர்ந்தபின் மறந்த
மழலைச் சிரிப்பை
மறுபடி திருப்பித் தரும்.

உறவின் மேன்மையை
உரத்துச் சொல்லும் !

ஒரு ஆயிரம் இருக்குமா ?
இருக்கலாம்..

எங்கள்
வாழ்வின் பயணத்தினை
படங்களாய் பதிவு செய்து
பத்திரப் படுத்தயுள்ளோம்
மக்களின் மக்களும் ரசிக்க..!

Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

என் தந்தையும் .. என் பிள்ளைகளின் தந்தையும்.!

உடுத்தும் வெள்ளை சட்டை ..
உள்ளம் அதனினும் வெண்மை.
கொண்ட செல்வம் ஏதும் இல்லை
எனினும்
கொடுத்து வாழ்ந்த குணம்..!

ஆலயம் , வீடு, கடை தாண்டி
வேறுலகம் கண்டதில்லை.
வறுமையில் செம்மையும்
எளிமையில் நிறைவையும் கண்ட
என் அப்பா அன்பு அப்பா !!

ஆச்சர்யம் ஆனால் உண்மை ..
என் பிள்ளைகளின் அப்பாவும்
என் அப்பாவும் .
ஒரே நூலில் நெய்த உன்னதங்கள் !
உறவுகள் போற்றும் வீட்டுப் பறவை !

கனவிலும் , நனவிலும்
எம்மை
மனதினில் சுமக்கும்
அன்பின் வடிவம்..

சுமைகளை தனக்கென வைத்து
சுகங்களை எமக்கே தரும்
இனிய உள்ளம்.!

நாணம் தடுக்கிறது ...!
என்ன சொல்ல
பெற்ற குழந்தைகள் போல்
நானும் மகளானேன்.!!
..தந்தையர் தின வாழ்த்துக்கள்..

பணி

பறந்துக் கொண்டே பறந்தேன் 
குறையில்லை ..!
கரைந்துக் கொண்டே 
பறக்கையில் 
கரைந்துக் கரைந்து 
புள்ளியானேன்..!

# இன்று பணி அப்படி.!!

இரயில் பயணங்கள் .

இரயில் பயணங்களில்
---------------------------------------
கரித்துகள் துப்பி
புகை கூண்டாய் விரைந்த
""சிக்புக் ...சிக்புக்" ரயில் போயின !

மின்னல் வேக
சதாப்திகள் சகாப்தம்
தூசியில்லா ஏசி பெட்டிகள்..
தும்பைப் பூ போர்வைகளுடன்..!

"நகர்கிற அரண்மனை"கள்
ராஜ கம்பீரத்துடன் ...

வரிசை நின்று
கால் கடுக்க பதிவு போய் .
இணையத்தில்
துண்டு போட்டு
சடுதியில் இடம் பிடிக்கலாம்..

எரிகிற அடுப்புடன்
நிதம் சமையல்....
உணவு வகை .... இரயிலை வீடாக்கும். !


மாறாதது ஒன்றேதான் !
சுவை , குணம் ..தரம் ...
அன்று போல் என்றும்
சாய் ....சாய் ...சாய்..!!!