Thursday, November 28, 2013

மிதிவண்டி ஏறி
இருவரும்
மென் மேகங்களில் மிதந்த
வண்ண நாட்கள்..

நூறுகளில் சம்பளம்
ஆயிரமாய் ஆனந்தம்


வாடகைக் கூடு
வாயிலில்
துடைத்து நிறுத்திய
வனப்பு..!

பெயர் கூட சூட்டினோம்
“ தம்பி”

பைல்கள்,
சாப்பாடு பை , காய்கறி பை
மளிகை கூட அதில்தான்.
பின்னால் நான்

சுமைகள் இருபுறம்...
மிதிக்கிற மன்னருக்கு
சுகமோ சுகம்

அம்மா வீடு , அலுவலகம்
திரையரங்கு, கோவில்
" நகர் வலம் "எல்லாமே
நம் “தம்பி”யுடன் தான்.

பின் சீட்டின்
மென்குரல்
இசை கசிய
தினம் தினம்
இன்ப உலா

நிறைமாத சூலுடன்
நிலைத் தடுமாறி
ஒருநாள் விழும் வரை ..!
மறுநாளில் டிவிஎஸ்

நதியோர சோலை போல
பின்
வசதிகள் வளர்ந்ததன
ஆனால்
வசந்தங்கள் மறப்பதிற்கில்லை
#வரலாறு

புகைப் பட உதவி Duraisamy Panchatcharam

தீபாவளி 2013

உள்ளுணர்வில் மத்தாப்பு 
உயரம் தாவும் 
ஏவுகணை.. ஏற்றங்கள் ..

வண்ணப் பூச்சொரியும் 
வாணங்கள்...நினைவுகள் ..
தரை சுழலும் சக்கரமாய்
விரைகிற கால ஓட்டம்

கணப் பொழுதில்
எழும்பி மறையும்
சிறு நாக கவலைகள் ..

மனம் விட்டு “வெடிச்” சிரிப்பு ..!
தினம்தானே தீபாவளி ??

எளிமையாகவேனும் புதுச் சேலை
ஈரத்துணி பொதிந்த மல்லிகை
இனிப்பெனில் அதிரசம் ...!
இருகரை தொடும் நதியாய்
எல்லையில்லா ஆனந்தம்
இப்படிதான் ...எப்போதும்..!


தலை

தீபாவளி ..!
மகள் ..மருமகன் ,ரியா வந்திட ..
நிறைந்து விட்டது வீடு..

உறவுகள் சேர்ந்து
ஒன்றாய் மகிழ்வதை
கடவுள்கள் காணட்டும்..

முகம் பார்த்துப் பேசுகிறாள் ரியா
விரல் பிடித்து வருவாள் அடுத்த ஆண்டு..!

ஆனந்தம் பொங்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ..!
மெல்ல சைக்கிளை 
மிதிக்கும் பெரியவர் – அப்பா 
கையிடுக்கில் தோல்பை – மாமா 
இன் பண்ணிய சட்டை- கோபி மாமா
எப்போதாவது தென்படும் பிரிமியர் பத்மினி- செல்வன்
ஓங்கி ஒலிக்கும் சிரிப்பு – அம்சா அத்தை

ஏதேனும், யாரேனும்
நினைவுக்குள் நகர்த்தி விட
மரித்தவர் மனதில்
உதித்து விடுகிறார்.

வெற்றிலை ,
கோழிக்குழம்பு,
கறை தின்ற காகிதத்தில் கையெழுத்து..
கட்டி வைத்த முல்லை
சிக்கலான மாக்கோலம் ..
சுவாமி புத்தகம் ...

எப்படியும், நினைவில்
மறுபடி பிறக்க வைக்கும்..
மரித்துப் போன உறவுகளை ..!

சிலிர்க்க வைக்கும்
பழம் பாடல் போலே-
மரியா சிவா ( 4-11-2013)

ஒரு துளி தேன் ..
பிரித்தெடுக்க
ஒரு நூறு பூக்களில்
அமர்ந்திருக்குமோ
தேனீ.. ?

வலியும்
சுமையும் இன்றி
வருவதில்லை வெற்றி ..!

மாலை வணக்கம்



ரியா -9௦

இன்றுடன் ரியா மூன்று மாதம் ..

முகம் பார்க்கிறாள் 
விரல்களைத் தொகுத்து வாயில் வைத்து சுவைக்கிறாள்.

எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறாள் ..புரியாத மொழியில் ..!
ஒருபக்கம் திரும்பி துயில் கொள்கிறாள்.

அவள் அம்மாவை தெரிந்து வைத்திருக்கிறாள்.
அதனால் அடம் பண்ணவும் கற்றுக் கொள்கிறாள்
தொடுகை புரிகிறது.

சுவரில் உள்ள நண்பர்கள் மிக்கி, டாலர், ரிச்சி , ஜெனி ,டோரா பார்த்து உரையாடுகிறாள்... ரசிக்கிறாள்.

ஒற்றை விரல் உதட்டில் வைத்து சிந்தனையில் ஆழ்கிறாள் ..!
சப்தமிட்டு சிரிக்கிறாள்,..

ஒரு பூ முகிழ்வது போல் உள்ளது .. மழலை வளர்வது...!
எல்லா கனமான தருணங்களையும்
இலகுவாக்கி விடுகிறது அவளின் இருப்பு.!!
நிழலும் ...உறவும்.


நெஞ்சில் சுமக்கும் 
நல் உறவுகள் 
நிழல்கள் போலே ..

ஒட்டியும் , விலகியும்
அண்மையில் ..
அன்றி தூரத்தில் ..

எண்திசையில்
ஏதோ ஒரு திசையில் ..!

நிழல் நீங்குவதில்லை
விலகுவதில்லை

நெஞ்சில் சுமக்கும் உறவுகள் போல..!

உதடு பிரியா புன்னகை 
உடைந்தாலும் , சரிந்தாலும் 
ஊமை அழுகை ..!

“ யார் , என்ன நினைப்பார் ?”
எப்போதும் மனம் குடையும் ஐயம் ..!

இப்போது
மனம் விட்டு சிரிப்பு
வாய் விட்டு அழுகை ..!

நெகிழ்தலும் ,
மகிழ்தலும்
விரிந்து வளையும்
புதிய மனம்..

உயரே உயரே
பறந்துச் செல்லும்
புதிய நான் .!
# முகநூல் உபயம் ..!

சிலுசிலுக்கும் குளிரில் 
சுகம் தரும்
மென்கதகதப்பாய்..

கடுங்கோடை வெம்மை
கனலென தகிக்கையில்
தரு நிழலாய்..

சில நேரங்களில் மழலையாய் ..
சில கரங்களில் குழவியாய் ...

அன்பு செய்யப் படுதலே
ஆனந்தம் ..!
அன்பு செய்வதோ..
பேரானந்தம் ..!!


மலை முகட்டில் கவிழ்ந்திருக்கும்
பனி அருந்தும்
பறவையாய் 

அலைசுமந்த கடல் தன்னில்
ஆழம் துழாவும்
சிறு மீனாய்

வனச்சரிவில் விளைந்திருக்கும்
மூங்கில் உரசல்களின்
மென் ஓசையாய்

நதிதீரம் குடியிருக்கும்
நாணல்களில் ஒளிந்திருக்கும்
பெயரறியா உயிரினமாய்

உயரே சிணுங்கும்
விண்மீன்கள் தாங்கும்
வெளியிடமாய்

ஏதேனும் ஒன்றாய்...

அன்றி
எல்லாமுமாய்
உரு மாறவே விரும்புகிறேன் ..!

# "அதற்கு"ப் பிறகு ..