Tuesday, September 27, 2011

AZHAGIYA THARUNANGAL( MUDHAL PARISU 5/5/97)




காலங்காலமாய் அழகைச் சுவைத்து 
கவிதைகளாய் சேர்த்து வைத்து 
அழகியவை வளர்த்த தேசமிது 
ஆனால்
மாறிவிட்ட உலகந்தன்னில் 
பொருள் தேடுகின்ற இயந்திரமாய் 
மனிதன் மாறியுள்ள நேரமிது.

அழகிய பூக்களை 
ஆசையாய் 
தொடுத்து அணிந்தாள் 
என் தாய் -
பாகங்களை அறிய -அதைக் 
கிழித்துக் கற்கிறாள் என் மகள். 

அழகியவை மறந்து, மறந்து
அறிவியலில் ஆழ்ந்துப் போனோம் .
பட்டியல்லிட்டுப் பார்க்கிறேன் 
வாழ்வில் 
பரவசம் சேர்க்கும் தருணங்களை!

மரணவாயிலில் மீண்ட தாய்
மலராக பூத்துள்ள மகளின் 
அழுகைக் குரலில் 
வலி மறந்துச் சிரிக்கும் தருணம்! 

கடற்கரை மணலெங்கும் 
நிலவொளி சிதறிக்கிடக்க ,
கணவருடன் விரல் கோர்த்து 
கால்கடுக்க நடக்கும் தருணம்!

சுட்டெரிக்கும் வெயிலில் 
மட்டையடிக்க பறக்கிற 
மறக்காமல் மகன் தந்த- புழுதி 
மனம் வீசும் ஈரமுத்தம்!

பூச்சரமாய் தந்தைமடி 
துங்கிய மகள்- இன்று 
பூப்பெய்திய காரணத்தால் 
தந்தை முகம் நோக்கி 
தாமரையாய் நாணிச் சிவக்கும் தருணம்!

பள்ளி நண்பனைப் பார்த்து
பழங்கதைகள் தொகுக்கின்ற தருணம்!
இவை மட்டுமா?

அபயம் அளித்திடும் ஆலய மணியோசை 
அழுகை நிறுத்திய குழவியின் சிரிப்பு , 
தரை மெழுகிய , மழை மூடிய 
தலை காட்டும் வானவில் .

வெள்ளிக் காசுகளை அள்ளி
இறைத்தாற் போன்று 
விண்மீன்கள் சுயாட்சி நடத்தும் 
நிலவில்லா இரவு .

தந்திக் கம்பிகளில் 
தலை சாய்ந்து 
எந்த ஊருக்கோ 
சேதி அனுப்பும் குருவிகள்!

பசியோடு பால் அருந்தும் குழவி,
பனி சிந்தும் இளங்காலை, 
பகலில் மழை , 
சுகமான அருவிக் குளியல்!

இவை மட்டுமல்ல . இன்னும் 
எத்தனை ,எத்தனை ,எத்தனையோ!

அழகிய தருணங்கள் நினைப்போம்,
நெஞ்சில் சுமக்கும் 
அழுகிய ரணங்களை மறப்போம்!






No comments:

Post a Comment