Saturday, January 3, 2015



வீதியில்
ஓங்கி ஒலிக்கும் குரல்
'உப்பு உப்பேய "

ஒரு முறம்..!
இருவது பைசா நாணயம்..!

அம்மா
கையில் திணித்து
வாசலுக்குத் துரத்துகிறாள.

குவிய குவிய அளந்து
முறத்தில் போட்டபின்னும்
அள்ளிப் போடுகிறார்
மேலும் ஒரு கைப் பிடி
"கொசுறென"
.
நினைவில்
மிச்சமிருக்கும்
பளபள படிகமென
வெண்ணிற உப்பும் ..
அது தோற்கும்
அவர் புன்னகையும் .

தாரள மயமான
தாயகத்தில்
ஒருநாள்
காணமல் போனார் ..
எங்களூர் "உப்புக்காரர் "
பொய்க்கும் அனுமானங்களில்
பொதிந்துக் கிடக்கிறது
புதிரான வாழ்க்கை ...

பணி நிறைந்து 
இல்லம் திரும்பும் முன்
இருள் கவிகிறது..

செல்லும் வழி எல்லாம் 
இல்லங்களின்
முகப்பில் சுடர் விட்டு
ஜொலிக்கும்
வண்ண வண்ண நட்சத்திரம்..
ஒரு ராசகுமாரனின்
வருகைக்கு
கட்டியமாக ..!

பரணில் உறங்குகிறது
என் வீட்டு
சென்ற வருட நட்சத்திரம்..!

நெகிழித் தாள் நீக்கி
தூசு துடைத்து
செப்பனிட்டு
சின்ன மின்விளக்கு
உள்ளே பொருத்தி
தொங்க விட வேண்டும் ..
இன்றேனும்..!

உள்ளம் நம்புகிறது
குழந்தை போல..

விண்மீன் இல்லாத போதும்
வழி சொல்லாத போதும்
என் இல்லம் தேடி வருவார் ..!

வர வேண்டும் ..
அந்த ராசகுமாரன் ...!

Monday, October 27, 2014

இளங்காலை பயணங்கள் :

நடுநிசியை  நனைத்த மழை
தீர்ந்து விட
விடிய துவங்கும்
இளங்காலை..!

“ எங்கு செல்கிறோம் .. கோவிலுக்கா ?”இவர்
  “ நகர்வலம் .. “ என்கிறேன் நான் .

சிலுசிலுக்கும் குளிர்காற்று
முகம் மறைக்க
இருசக்கர வாகனத்தில் நாங்கள் ..

ஈரக் கூந்தல் சொட்ட சொட்ட ..
தோள் பற்றி ...

ஆற்றுப் பாலம் கடக்கையில்
விலகும் இருளில்
ஒளிரத் துவங்கும் கதிர்..

எழிற்கோலம் எழுதும்
இனிய வானம் ..

தாரைகள் தரையிறங்க
மிச்சம் கவிழும்
மழைப் பருகி விரைகிறோம்
நாங்கள் ..


# நினைவுகள் தொடர்கதை ..!
நட்ட நடு இரவில்
நெற்றிப் பொட்டில்
பட்டுத் தெறித்தது
ஒற்றைத் துளி !
“அம்மா மழை “ என்றேன்.

அம்மா
அப்பாவை எழுப்ப
அடுக்களைப் பாத்திரமெல்லாம்  
இடம் பெயர்ந்தன .
காலருகே , தலையருகே
வலமும், இடமுமாய்
தலை விரித்த குடைகளென
மழை ஏந்தின

“ அடுத்த மழைக்குள்
ஓடு மாற்ற வேண்டும் “
இது அப்பா.
“ஐந்து மழைக்காலமாய்
மாறாத பேச்சும்
மாற்றாத ஓடுகளும்  “
என்பாள் அம்மா .

கன்னத்தில் நீர் தெறிக்க
நேற்றிரவு 
கணவரை எழுப்பினேன்.
“நாளை ஏசி பழுது பார்க்க
ஆளை அழைக்கிறேன் “ என்றார்.


மாறித்தான்  போனது வாழ்க்கை !

Tuesday, August 26, 2014

களையும் கம்பீரம்

முகம் காட்டா 
விழுப் புண்கள் 
தழும்பென
அடி மனதில் ..!

வருடித் தருகையில் 
மறுமொருமுறை
வலிகள்
பிறப்பெடுக்க ..

உடன்
கால்கள் துவளும்
கம்பீரம் தொலைத்து ..!

Sunday, June 8, 2014

நம் வாழ்வு அழகானது "

எட்டு மணிக்கே
" களைத்திருக்கிறேன் ..." என்கிறேன்

" இப்போதே உறங்கிடு " என
எடுத்துத் வருகிறாய்
போர்வையை. ...

அழுத்தம் சூழ்ந்த
என் மௌனத்தை
அழகெனவே
சகித்துக் கொள்கிறாய் .

அர்த்தமற்ற சீற்றத்துடன்
நான் கீறுகையில்
அணைக்கும் பார்வையால்
அமைதி செய்கிறாய்

சுகமாய் எனைச்
சுமந்து செல்கிறாய்
வயதின் வலிகளை
மறைத்தபடி.

இணைந்தே செல்லலாம் வா
அன்பின் வெளியில் ...!
"
நம் வாழ்வு அழகானது "
என கூவிக் கொண்டே ..!
 —