Thursday, November 28, 2013



ரியா -9௦

இன்றுடன் ரியா மூன்று மாதம் ..

முகம் பார்க்கிறாள் 
விரல்களைத் தொகுத்து வாயில் வைத்து சுவைக்கிறாள்.

எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறாள் ..புரியாத மொழியில் ..!
ஒருபக்கம் திரும்பி துயில் கொள்கிறாள்.

அவள் அம்மாவை தெரிந்து வைத்திருக்கிறாள்.
அதனால் அடம் பண்ணவும் கற்றுக் கொள்கிறாள்
தொடுகை புரிகிறது.

சுவரில் உள்ள நண்பர்கள் மிக்கி, டாலர், ரிச்சி , ஜெனி ,டோரா பார்த்து உரையாடுகிறாள்... ரசிக்கிறாள்.

ஒற்றை விரல் உதட்டில் வைத்து சிந்தனையில் ஆழ்கிறாள் ..!
சப்தமிட்டு சிரிக்கிறாள்,..

ஒரு பூ முகிழ்வது போல் உள்ளது .. மழலை வளர்வது...!
எல்லா கனமான தருணங்களையும்
இலகுவாக்கி விடுகிறது அவளின் இருப்பு.!!
நிழலும் ...உறவும்.


நெஞ்சில் சுமக்கும் 
நல் உறவுகள் 
நிழல்கள் போலே ..

ஒட்டியும் , விலகியும்
அண்மையில் ..
அன்றி தூரத்தில் ..

எண்திசையில்
ஏதோ ஒரு திசையில் ..!

நிழல் நீங்குவதில்லை
விலகுவதில்லை

நெஞ்சில் சுமக்கும் உறவுகள் போல..!

உதடு பிரியா புன்னகை 
உடைந்தாலும் , சரிந்தாலும் 
ஊமை அழுகை ..!

“ யார் , என்ன நினைப்பார் ?”
எப்போதும் மனம் குடையும் ஐயம் ..!

இப்போது
மனம் விட்டு சிரிப்பு
வாய் விட்டு அழுகை ..!

நெகிழ்தலும் ,
மகிழ்தலும்
விரிந்து வளையும்
புதிய மனம்..

உயரே உயரே
பறந்துச் செல்லும்
புதிய நான் .!
# முகநூல் உபயம் ..!

சிலுசிலுக்கும் குளிரில் 
சுகம் தரும்
மென்கதகதப்பாய்..

கடுங்கோடை வெம்மை
கனலென தகிக்கையில்
தரு நிழலாய்..

சில நேரங்களில் மழலையாய் ..
சில கரங்களில் குழவியாய் ...

அன்பு செய்யப் படுதலே
ஆனந்தம் ..!
அன்பு செய்வதோ..
பேரானந்தம் ..!!


மலை முகட்டில் கவிழ்ந்திருக்கும்
பனி அருந்தும்
பறவையாய் 

அலைசுமந்த கடல் தன்னில்
ஆழம் துழாவும்
சிறு மீனாய்

வனச்சரிவில் விளைந்திருக்கும்
மூங்கில் உரசல்களின்
மென் ஓசையாய்

நதிதீரம் குடியிருக்கும்
நாணல்களில் ஒளிந்திருக்கும்
பெயரறியா உயிரினமாய்

உயரே சிணுங்கும்
விண்மீன்கள் தாங்கும்
வெளியிடமாய்

ஏதேனும் ஒன்றாய்...

அன்றி
எல்லாமுமாய்
உரு மாறவே விரும்புகிறேன் ..!

# "அதற்கு"ப் பிறகு ..

Tuesday, October 15, 2013

மண் சொப்புகளும் ..மரப்பாச்சியும்

மண் சொப்புகளும் ..மரப்பாச்சியும் ..!
          
எப்போதும் விளையாட வேண்டும் ..
அலைபேசி , மடிக்கணினி  , வீடியோ
மாற்றி மாற்றி ...

காரோட்டி,
உண்டி வில்லில் பறவை வீழ்த்தி
வெட்டி, சுட்டு, குத்தி
எதிலாவது விளையாட வேண்டும் ..
அவளுக்கு ...

என் தங்கை மகள் ..!

எந்நேரமும் இவைதானா ?
சலித்தவாறே  ?”
தேடித் தேடி வாங்கி தந்தேன்
மண் சொப்புகள் !

விநோதமாய் பார்த்தாள்..
“இவை  வைத்து என்ன செய்ய ?

இரண்டு மண் சொப்பும்
ஒரு மரப்பாச்சியும் போதுமே
மழலை உலகை  மலர்விக்க..!

மண் வீடு கட்டி
கூட்டாஞ் சோறு சமைத்து
பொம்மை கல்யாணம்  செய்து
அது ஒரு தனி உலகு ..!
எழிலழகு

கூழாங்கல்லும்,
புளியங்கொட்டையும்
வைரக்  குவியலான
குழந்தை ராஜ்ஜியம் ..


கண் விரிய நான் சொன்ன
கதைகள்  கேட்டபின் 
கேட்டாள்:
“ உங்க “டேப் “ இல் சார்ஜே இல்லையா
டெம்பிள் ரன் ஆடனும் ..














Sunday, September 8, 2013

பாப்பா யார் போல் இருக்கா ?

விழிகள் இரண்டும் ...அப்பா ..!
நெளியும் சிரிப்பு அம்மா..!
வளையாத நேர்க்கோடு முடி அம்மாவின் அம்மா..!
விரல்களின் நீளம்..  அம்மாவின் அப்பா ..!!
முகவாய் கொஞ்சம்... அப்பாவின் அம்மா  ..!
மென்கன்னங்கள்  அப்பாவின் அப்பாவின் அம்மா .!
யோசிக்கும் தோரணை அப்பாவின் அப்பா..
நாசி சொல்லும் ...அம்மாவின் அப்பாவின் அம்மா..!!
குட்டிப் பாப்பா யார் போல் இருக்கா ?
ஒற்றைவரி கேள்விக்கு எட்டுவித பதில்  ...
எனக்கென்னவோ

பாப்பா பாப்பா போல்தான்  இருக்கா ..!!