மகளிர் தினம் 8-3-2013 ல் வாசித்த கவிதை.!
வருடம் ஒருநாள்
வந்துப் போகும்
விடுதலைத் திருநாள் போல்
நமக்கெல்லாம் ஒருநாள்
நமக்கே நமக்கான திருநாள்
மகளிர் தினம்.
உ வப்பான நிகழ்வாக
உரிமையுடன் கை கோர்த்து
இனிப்பும் , பட்டும்
இசையும் கவிதையும்
என்று இணைந்து மகிழும்
மகளிர் தினம்.
ஆனால்
உலராத கண்ணீருடன்
உயிர் உறையும் சம்பவங்கள்.
கனத்த இதயங்களை
கலங்க அடிக்கும் நினைவுகள்.
புண்ணிய நதிகள்
புறப்படும் தேசத்தில்
பெண்மைக்கு நேரிடும்
பேரிடர் துயர்கள் எல்லாம்
எண்ணிப் பார்க்கையில்
திண்ணிய நெஞ்சம் கூட
திகைத்து தவிக்கும்.
பின்னிரவில்
தலைநகரில்
வன்புணர்ச்சி செய்யப் பட்டு
அம்மனமாய் வீசப்பட்ட
பெண் மகளை
நினைக்கையில்
பெண் பெற்ற வயிறுகளில்
பற்றிக் கொண்டது பெருந் தீ .!
அழகிய முகங்களை
அமிலத்தில் கரைத்து
அவர் தம் உடலை
நிலத்தில் புதைத்து
எந்த பசியைத
தீர்த்து கொண்டது இந்த தேசம்.?
பால் மணம் மாறா
பள்ளி சிறுமிகள்
பாலியல் கொடுமையில்
பாழ் பட்டு
உயிர்விட
அவர் எழுப்பிய
அலறலில்
படுக்கையினின்று
திடுக்கிட்டு எழுந்து
உறக்கம் தொலைத்த
துன்பம் எப்படி சொல்வேன்?
நேசத்துக்குரிய
என் தேசத்தில்
ஊருக்கொருவராய் வீற்றிருக்கும்
பெண் தெய்வங்கள் எல்லாம்
ஊமையாய் போனதென்ன?
போருக்காய் சேமித்த
ஆயதங்கள் எல்லாம்
பேருக்காய் இருப்பதென்ன?
ஆயிரம் சொல்லி
ஆற்றினாலும்
ஆறாத ரணம் இது.
நெஞ்சில் தீராத
சோகம் இது.!
என்ன காரணம்?
வன்முறை தினம்
வளருதே
என்ன காரணம்?
மாறி வரும் வாழ்க்கை முறை?
மலிந்துப் போன மதிப்பீடுகள் ?
நம் வளர்ப்பு முறையா?
திரையா ? ஊடகமா?
சிறுபொறி ஊரை அழிக்கும்
திருவிளக்கு இருளை விலக்கும்.
வன்முறை தீயை
ஒன்றாய் அணைப்போம்
இருளை விரட்டும்
திரு விளக்காய் ஒளிர்வோம்..
No comments:
Post a Comment