Sunday, March 17, 2013

மின்னி ஒளிரும் வெள்ளிப் பூக்கள் - தாமதமான பதிவு.




மின்னி   ஒளிரும்  வெள்ளிப்   பூக்கள்    !!


  வீட்டில் அலமாரிகளை சுத்தம் செய்யமுற்படுகையில் ,  என் கை பட்டு ஒரு சின்ன பெட்டி தரையில் விழ ,  அதிலிருந்து  சிதறின குட்டி குட்டியாய் வெள்ளிப் பூக்கள். அழகான சாடின் துணியால் செய்யப்பட்டு ,  அதில் தொங்கிற ' போ' போன்ற ரிப்பனும் ,   சட்டையில் குத்தி கொள்ள வசதியாய்  பின்னும் பொருத்தப்பட்ட பேடஜ்  போன்ற அந்த பூக்கள்  சிந்தனையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்  செல்ல  வைத்தது. 

 அந்த வெள்ளிப் பூக்கள் நினைவூட்டியவை எங்கள் திருமணத்தின் வெள்ளி விழா பற்றிய  நிகழ்வுகளை. ! இதுவரை இது பற்றி நான் பகிரவில்லையே என்ற வருத்தம் தோன்ற , இதோ  ஆரம்பித்து விட்டேன்.

  எங்கள் இருவரின் திருமணம் 1985, ஆகஸ்டில் நடந்தது..எங்கள்  திருமண வெள்ளி விழா  2010 ல் .!!   . இது பற்றி பிள்ளைகள்  2010 துவக்கத்தில் இருந்தே பேச ஆரம்பித்தார்கள். !  நானும் , கணவரும் ,  இந்த பேச்சு வரும் போதெல்லாம்  சற்றே எளிமையாய் செய்யலாம் என்றே சொல்லி வந்தோம். எங்கள் திருமணமே , மிக எளிமையாய் , நிகழ்ந்த ஒன்று. 

  ஒவ்வொரு முறை இது பற்றி  பேசும் போது , நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றே இருவரும் சொல்வார்கள்.  நாங்கள் , உறவினர்கள் , நெருங்கிய நன்பர்களுக்கு ஒரு டின்னர் அல்லது லஞ்ச  செய்யலாம் என கருதினோம்.. 

      ஆனால் , இந்த செய்தி  என் பிள்ளைகள் வழி உறவினர்களுக்கும் சென்று , அந்த நாளை , ஒரு பெரிய கொண்டாட்டமாகவே  மாற்றி விட்டனர். 

      எங்கள் வீடு மாடியில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் . அப்போது தவறி கூட , நாங்கள்  அந்த பக்கம் போய் விட கூடாது என். கடைசி வரை ஏற்பாடுகளை ரகசியமாய்  வைத்தனர்.  எங்கள் பிள்ளைகள் மட்டும் அல்ல ,  எங்கள் உடன் பிறப்புகளின் பிள்ளைகளும் அந்த கூட்டத்தில் கலக்க ஆரம்பித்த   போது  தான்  , எங்கள் கவனம் அதில் திரும்பியது. 

    " பணம் மட்டும் கொடுங்கள் , மற்றது எங்கள் பொறுப்பு" என்ற போது  நிஜமாக கவலைப் பட ஆரம்பித்தோம் . இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ  என்று .

         முதலில் வீட்டுக்கு வந்தது அழைப்பிதழ். !  வெள்ளி நிறத்தில் , சிறிய , அழகிய கார்டு.  அழைத்தவர்கள்  எல்லா  பிள்ளைகளும்  ( மொத்தம்  27 பேர்) 28 வயது  துவங்கி கடைசி அழைப்பாளரின்  வயது ஒன்று.   அவர்கள் அத்தனைப் பேரின் பெயரும் அதில் அச்சடிக்க வைத்திருந்தனர்.     அழைப்பிதழ்  நெருங்கிய நன்பர்களுக்கும் ,   முக்கிய உறவினர்களுக்கும்  தரப்பட்டன . வேலூர் " Darling  residency " ஓட்டல்  ஹாலில் நிகழ்த்த ஏற்பாடு. .

         நாள் நெருங்க , நெருங்க நடக்கிற ஏற்பாடுகளை பார்த்தால் , பட்ஜெட் குறித்து  சிறிது கவலையும் ஏற்பட்டது. மெனு முதற் கொண்டு எல்லாமே அவர்களே  முடிவ்டுத்தார்கள் . 
             சென்னை உறவினர் , சகோதரிகளின் மருமகன்கள் , மகள்கள் சம்பந்தி , என முதல் நாள் 20 ஆம் தேதியே சிலர் வந்து விட்டனர். வீடு களை  கட்டி விட்டது. இரவு 12 மணிக்கு எங்கள்  படுக்கை அறை  கதவு தட்டப்பட , வெளியே  வந்தால் , அந்த நேரத்தில் , ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து வெட்ட வைத்தனர். ஒரு பார்சல் பிரிக்க வைத்தனர். அதில் 25ஆண்டுகளுக்கு  முன் நாங்கள் அலுவலகம் செல்ல தயாரான நிலையில் எடுக்கப் பட்ட புகைபடம்  அழகாக பிரேம்  செய்து ,   பரிசாய் அளித்தனர்.(புகைப்படம்  பார்க்க ..)

       21 ஆம் தேதி அழகாய் விடிய , காலை  சர்ச்சில் ஸ்பெஷல் சர்வீஸ் எங்களுக்காக. கடவுள் ஆசியுடன் !  அங்கே  வந்தவர்களும் கை குலுக்க ,   இனிப்பு தந்து . வெளி வந்தோம். அன்ற மாலைதான் விழா. எல்லா உறவினர்களும்  வீட்டுக்கு வந்து விட்டனர். 

      மாலையில் அனைவரும் ஓட்டலுக்கு சென்று விட, சரியான நேரத்தில்  அலங்கரிக்கப் பட்ட   எங்கள் கார்  எங்களை சுமந்து , ஓட்டலுக்கு சென்றது. 
     ஓட்டல் வாயில் ஆரத்தி. உடன் என் தங்கை மகள் , முதலில் நான் சொன்ன அந்த வெள்ளிப் பூவை எங்களுக்கு பின் செய்து விட்டாள் .  ஹாலுக்குள் நுழிய முற்படுகையில் , கதவு  உட்புறம் அடைக்கப் பட்டு  இருந்தது. திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தனர். நுழைகையில் இருவர் மேலும் பூக்களை  சொரிந்தனர்.

       நிகழ்ச்சி துவங்கியது. இறை வாழ்த்துப் பாடல்  தங்கை மகள் பிரிசில்லா பாடினாள் ( அப்போது அவள் வயது 8). சிறய ஜெபம்  . முடிந்ததும். என் மகள்  தொகுப்புரை வழங்க துவங்கியது. மகன் பிரசன்னா வரவேற்புரை  ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொண்டு  படித்தான். எங்களை  மாலை மாற்ற வைத்தனர். மீண்டும் ஒரு கேக் வெட்டினோம். நண்பர்கள்  அன்று மழையை  பொருட்படுத்தாமல்  வந்திருந்தனர். 

     எங்கள்  ( சகோதரியின் ) மருமகன் ராஜ்குமார் தானே  எழுதி வந்த கவிதையை படித்தி வாழ்த்தினார். மகன் சந்தோஷ் தானும் ஒரு கவிதை படிப்பதாகச் சொல்லி படித்தார். திடுக்கிட்டு போனேன் . ஏனெனில் , அது நான் என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்த கவிதை தான். என் மாமா சுகுமாரன் , வாழ்த்த வந்து எங்களை கண்  கலங்க வைத்தார்.  பின் வந்த சம்பந்தி திரு . சத்திய மூர்த்தி மேலும் பேசி  நெகிழ வைத்தார். 

      அதன் பின் நடந்தது தான் மிக அற்புதமான நிகழ்வு. எங்கள் குடும்ப புகைப் படங்களை , பழைய  படங்கள் ,உறவினர்களின் திருமண புகைப் படங்கள் ,  என எல்லாவற்றையும் மின் திரையில் " DOWN  THE  MEMORY LANE " என்ற தலைப்பில் PRESENTATION கொடுத்தனர். மிக அபூர்வ படங்கள் சிலவற்றை எப்படி COLLECT   செய்தனர் என்றே தெரியவில்லை. 

ஒரு மெகா வாழ்த்து  மடலில் , எல்லோரின் வாழ்த்தையும் , கை ஒப்பமிட்டு தந்தனர். ஒரு வயது தீபு கூட கை பிடித்து கை எழுத்து போட்டிருந்தது.  பார்க்கும் போதே எங்கள் இருவரின் கண்களும் நிரம்பி விட்டன. 

     பின் அங்கு வந்த ஜோடிகளுக்கு போட்டி வைத்து , எங்களை பரிசு கொடுக்க செய்தனர்.BUFFET  உணவுடன்  நிறைவு செய்தனர். நடுவே , அயல் நாட்டில் இருக்கும் உறவினர்கள் , நண்பர்கள் பேசி  கொண்டே இருந்தது.  திருபி வருகையில் காரில் பாடிய "  ஆனந்தம் விளையாடும் வீடு " அன்று  புதிதாக அனுபவித்தோம்.

      மனதை நெகிழ வைக்கும் வகையில் உடன் பிறந்தோரும் , பிள்ளைகளும் உறவினர்களும் எங்கள் திருமண வெள்ளி விழாவை நிறைவு செய்தனர்.   கைமாறாக அன்பை தவிர ,  திருப்பி தர   வேறு என்ன இருக்கிறது. 

இருவேறு மதம் , இனம் . இருந்தும் எங்கள் மண  வாழ்வு நிறைவாக இருக்கிறதென்றால் அதன் முழு  பொறுப்பும் என் கணவருக்கே. 

      வாழ்வே ஒரு வரம் எனில், வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் தான். இந்த வெள்ளி விழா கொண்டாட்டங்கள் அதைத்தான் எங்களுக்கு எடுத்து சொன்னது.. 


ஆனால் எத்தனை பேருக்கு இது அமையும்.?  
எங்களுக்கு நடந்தது 

                                       " யார்க்கிது வாய்க்கும்?"

  









              



















1 comment:

  1. அருமை
    வாழ்த்துக்கள் மரியா

    ReplyDelete