Sunday, January 4, 2015

மென் நுரை துப்பிய
சின்ன சின்ன  சங்கு
வெண் சிப்பிகளைப்
சேலைத் தலைப்பில்
சேகரிக்கிறேன்   
ஓதம் விரவிய
மணற் படுகையில்
ஓடும் கருநண்டு
விரல் தொடும் என
விலகி விலகி
நடக்கிறேன்.
வண்ணக்
குடை நிழலமர்ந்து
கடல்  மீன்களைக்
கணக்கெடுக்கிறேன்

மேலிருந்து  
நீலம் தோய்த்த
வான்மேகம்
உடன் தொடர

ஆழ்கடலை ரசிக்கிறேன்


பிசுக்கு வாணலியின்
அழுக்கை
அழுந்த அழுந்த
தேய்த்துக் கொண்டே ,,!

இனிய ஞாயிறு
 

Saturday, January 3, 2015

சாளரத்தின் வழி
சங்கீத
பறவை இசை ..

அறையின் மென் குளிர் 
விரல் தொட்டு
துயில் எழுப்ப

வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!
ஆண்டாண்டு அடுக்களையில் நின்னு 
வேண்டியதெல்லாம் சமைச்சாச்சு 
வித விதமாய் சுவைச்சாச்சு .

பெத்தவங்க கிட்டே 
கத்துக் கொண்டது போக
புத்தகம் பார்த்தும
புதுசா நிறைய படிச்சாச்சு.

மகளுக்கு பருப்பு சாதம்
மகனுக்கு கார கிரேவி
யாருக்கு என்ன பிடிக்கும்
என்பதெல்லாம்
மனப்பாடம் செஞ்சாச்சு

எனக்கென்ன பிடிக்கும ?

என்னையே கேட்கையில்
அடிநாக்கில் தங்கி விட்ட
ருசியொன்றை
அசை போட்டது மனசு.

மசக்கை காலத்தில்
மயங்கி இருக்கையில்
கணவர்
புகட்டிய
பொறுக்கும் சூட்டில்
அரிசிக் கஞ்சி
உறைப்பும்
புளிப்புமாய்
புளித் துவையல். ..!



நட்பு
அன்பு
காதல்
கடமை
அர்ப்பணிப்பு 

இன்ன பிறவற்றின்
நிறங்கள் எல்லாம்
உணர்ந்தே
அறிதல்
உன்னதம் ..!

உளதென
நிறுவுதல்
பெருந்துயர்..!!
வட்டமிட்டு வட்டமிட்டு
குட்டிக் கரணம் 
போடும் சின்ன முயல்..

மூக்கில் வைத்த பந்தை 
முட்டித் தள்ளும்
டால்பின்

எட்டுக்கொரு
முட்டையிட்டு
எகிறி செல்லும்
ஆங்ரிபேர்ட் .

மெட்டு போட்டு
மேளம் கொட்டும்
குரங்கு

T .வடிவில்
தலையாட்டி
விரையும் நாய் குட்டி

சுவரில் மிதக்கும்
வண்ண மீன்கள்.

மழு மழு
வழுக்கையுடன்
அடிவாங்கும்
கட்டம் போட்ட
சட்டைப் பையன் ..

காற்றுப் போன
சோட்டா பீம்

இன்னும் சில
நண்பர்களுடன்
களைப்பின்றி, சலிப்பின்றி
இயங்கும்
"ரியாவின் " உலகம் 


தலைக்கு மேல் 
கூரை இன்றி 
வெளியிடம்
உறங்கும் உயிர்களை 
துரத்தி துரத்தி 
அடித்திருக்கும் ..
நள்ளிரவில்
நகர் வலம்வந்த
கனமழை..

உடன்
இளகிய மண்ணும்..

உள் துடித்து
மருகிடும் மனமும்..!

அரைக்கையும் இல்லை
முழுக்கையும் இல்லை 

முழங்கை வரை தைத்து
மடித்து மடித்து
அரைக் கையாய்
ஏற்றிய சட்டை..

அணிந்தவரைத் தேடுகிறேன்
அப்பாவின் நினைவில்
கப்பலில் பயணிக்கும்
யோகம் வாய்க்கினும்
அலை நடுவே
தெப்பத்தில் ஏறி
தடுமாறி வீழ்தல் 
......வாழ்வென்பது..

கரிய முதலைகள்
கால் பற்றி
இழுக்கையில்
விரலிடை
நழுவும்
சிறு சிறு மீன்களுக்காய்
அழுது அரற்றுதல்
........வாழ்வென்பது.

கைக்கெட்டும்
தொலைவில்
கண் சிமிட்டும்
முத்துக்களை
புறக்கணித்து
கால் கடுக்க
சிப்பிக்கென
உழன்று வருந்துதல்
.......வாழ்வென்பது
# வாழ்வென்பது..

சீக்குப் பிடித்த சேவல்
காற்தடமென 
வளைந்த வரிகளும் 
நெளிந்த எழுத்தும் 
பால்யத்தில் ..

“ முத்துக் கோர்த்தது
போல எழுது ”
முட்டி மடிக்க
விழுந்த அடிகளில்
வளைந்த விரல்கள்
நடனமிட, நடனமிட
நளின அழகில்
மிளிர்ந்து ஒளிரும்
இளமை எழிலெனவே

வயதின் முதிர்வு நெருக்கிட
தளர்ந்து
கலைந்து
தனித்துவம் தொலைத்து
வாழ்க்கைக் களைப்பில்
இன்று
கம்பீரம்
களைந்ததென்
கையெழுத்து.

தொலைநோக்கு 
தவறுகையில்
உள் நோக்கி 
அங்கொளிரும் 
இறை வழி 
ஒளி பெறுவேன்.
****************


புலன்கள்
புலப்படுத்தா 
அப்பேரன்பின்
ஆழங்கள் ...!
அறிந்துணர்வதே
பிறவிப் பயன் !!

***********************


வீதியில்
ஓங்கி ஒலிக்கும் குரல்
'உப்பு உப்பேய "

ஒரு முறம்..!
இருவது பைசா நாணயம்..!

அம்மா
கையில் திணித்து
வாசலுக்குத் துரத்துகிறாள.

குவிய குவிய அளந்து
முறத்தில் போட்டபின்னும்
அள்ளிப் போடுகிறார்
மேலும் ஒரு கைப் பிடி
"கொசுறென"
.
நினைவில்
மிச்சமிருக்கும்
பளபள படிகமென
வெண்ணிற உப்பும் ..
அது தோற்கும்
அவர் புன்னகையும் .

தாரள மயமான
தாயகத்தில்
ஒருநாள்
காணமல் போனார் ..
எங்களூர் "உப்புக்காரர் "
பொய்க்கும் அனுமானங்களில்
பொதிந்துக் கிடக்கிறது
புதிரான வாழ்க்கை ...

பணி நிறைந்து 
இல்லம் திரும்பும் முன்
இருள் கவிகிறது..

செல்லும் வழி எல்லாம் 
இல்லங்களின்
முகப்பில் சுடர் விட்டு
ஜொலிக்கும்
வண்ண வண்ண நட்சத்திரம்..
ஒரு ராசகுமாரனின்
வருகைக்கு
கட்டியமாக ..!

பரணில் உறங்குகிறது
என் வீட்டு
சென்ற வருட நட்சத்திரம்..!

நெகிழித் தாள் நீக்கி
தூசு துடைத்து
செப்பனிட்டு
சின்ன மின்விளக்கு
உள்ளே பொருத்தி
தொங்க விட வேண்டும் ..
இன்றேனும்..!

உள்ளம் நம்புகிறது
குழந்தை போல..

விண்மீன் இல்லாத போதும்
வழி சொல்லாத போதும்
என் இல்லம் தேடி வருவார் ..!

வர வேண்டும் ..
அந்த ராசகுமாரன் ...!