Sunday, June 16, 2013

தந்தையர் தினம்

என் தந்தையும் .. என் பிள்ளைகளின் தந்தையும்.!

உடுத்தும் வெள்ளை சட்டை ..
உள்ளம் அதனினும் வெண்மை.
கொண்ட செல்வம் ஏதும் இல்லை
எனினும்
கொடுத்து வாழ்ந்த குணம்..!

ஆலயம் , வீடு, கடை தாண்டி
வேறுலகம் கண்டதில்லை.
வறுமையில் செம்மையும்
எளிமையில் நிறைவையும் கண்ட
என் அப்பா அன்பு அப்பா !!

ஆச்சர்யம் ஆனால் உண்மை ..
என் பிள்ளைகளின் அப்பாவும்
என் அப்பாவும் .
ஒரே நூலில் நெய்த உன்னதங்கள் !
உறவுகள் போற்றும் வீட்டுப் பறவை !

கனவிலும் , நனவிலும்
எம்மை
மனதினில் சுமக்கும்
அன்பின் வடிவம்..

சுமைகளை தனக்கென வைத்து
சுகங்களை எமக்கே தரும்
இனிய உள்ளம்.!

நாணம் தடுக்கிறது ...!
என்ன சொல்ல
பெற்ற குழந்தைகள் போல்
நானும் மகளானேன்.!!
..தந்தையர் தின வாழ்த்துக்கள்..

பணி

பறந்துக் கொண்டே பறந்தேன் 
குறையில்லை ..!
கரைந்துக் கொண்டே 
பறக்கையில் 
கரைந்துக் கரைந்து 
புள்ளியானேன்..!

# இன்று பணி அப்படி.!!

இரயில் பயணங்கள் .

இரயில் பயணங்களில்
---------------------------------------
கரித்துகள் துப்பி
புகை கூண்டாய் விரைந்த
""சிக்புக் ...சிக்புக்" ரயில் போயின !

மின்னல் வேக
சதாப்திகள் சகாப்தம்
தூசியில்லா ஏசி பெட்டிகள்..
தும்பைப் பூ போர்வைகளுடன்..!

"நகர்கிற அரண்மனை"கள்
ராஜ கம்பீரத்துடன் ...

வரிசை நின்று
கால் கடுக்க பதிவு போய் .
இணையத்தில்
துண்டு போட்டு
சடுதியில் இடம் பிடிக்கலாம்..

எரிகிற அடுப்புடன்
நிதம் சமையல்....
உணவு வகை .... இரயிலை வீடாக்கும். !


மாறாதது ஒன்றேதான் !
சுவை , குணம் ..தரம் ...
அன்று போல் என்றும்
சாய் ....சாய் ...சாய்..!!!

சிரிப்பு

உன்னத அமைதி சூழல்..
உயிர் உருக்கும் மெல்லிசை.
மெய் மறந்து 
இறை நிலை தொடும் தீவிரம்.

ஆயிரம் பக்தர் கூடிய
தேவாலய கூடம்..

சட்டென்ற “டப்” ஒலியும்
ஒற்றைக் குரல் சிரிப்பும்..

விழிகள் சில திரும்பி
புருவம் நெரிக்க..
கை கொட்டி நகைத்த
சுட்டிப்பயல்..!

நெஞ்சுக்குள் கேட்டதுவோ
மற்றோர் உரத்த சிரிப்பு .
அன்னை கையில் தவழும்
இறைமகன் நகைப்பு

#உடைந்த பலூன்.. குழந்தைகள் குதூகலம்.!

கருணை .

கதையல்ல ..நிஜம்..
ஒரு தவறு ....இரு தண்டனைகள் !!
எங்கள் பள்ளி , கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் ..எப்போதும் முன்னணியில்...
ஒரு சிறுமி அப்போது வேலூர் சுற்றியிருக்கும் சிற்றூரில் இருந்து படித்தாள்.
5 கி.மீ நடந்து வந்துப் படித்தாள். ஆனால் மிக நன்றாகப் படிப்பாள்.. கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கி விடுவாள்.

ஒரு நாள் காலை சரியான மழையில் , நனைந்தே வந்து சேர்ந்தாள்..பள்ளிக்கு தாமதம்.

கண்டிப்பிற்கு பெயர் போன H.M சிஸ்டர் பாரபட்சமின்றி ...
..”போய் இண்டர்வல் வரை வகுப்பில் பின்னால் நில்”
சொட்ட சொட்ட நனைந்து , . கைகள் விறைத்து , உடல் நடுங்கி... நின்றுக் கொண்டே ..
இரண்டாவது பீரியட் துவங்கியது.
செல்வராணி டீச்சர் வகுப்பு..முதற் கேள்வி “ ஏன் நிற்கிறாய்?”

விவரம் தெரிந்ததும் கடும் கோபத்துடன் கட்டளை பிறப்பித்தார்.
விடுதிக்கு அனுப்பி , உடை மாற்றி, டீ குடிக்க செய்து அமரவும் வைத்தார்.
சற்று நேரத்தில் வகுப்புக்கு வலம்வந்த H.M சிஸ்டர் கடுமையாய் டீச்சரைக் கண்டித்தார்.எங்கள் கண் முன்.!
கவலையே படவில்லை டீச்சரின் கருணை !


அதே பள்ளி , அதே மாணவி.. வேறு வருடம்.. வேறு HM.
மீண்டும் கால தாமதமாய் ..
இம்முறை தண்டனை “ இதுவரை நடத்தா English Poetry யைப் படித்து ஒப்புவித்து விட்டு செல்.?
அடுத்த நிமிடமே அந்த சிறுமி புத்தகத்தை கொடுத்து ஒப்புவிக்க..
“ வேறேது படிக்கவில்லை சொல்?” என
“ புத்தகம் வாங்கிய உடன் எல்லா English poetry யும் மனப்பாடம் செய்தேன் எதையும் கேளுங்கள்”

“ ஓடு ஓடு.. வகுப்பிற்கு” என்ற HM இடைவேளையில் மீண்டும் அச்சிறுமியை வரவழைத்தார்.
“ ஆங்கில இலக்கியம் எடுத்துப் படி. உனக்கு ஆர்வம் இருக்கிறது..” இது HM..“தமிழ் செய்யுட்களையும் நடத்தும் முன் படித்து வைத்திருக்கேன் “ என்றாள் சிறுமி.

இலக்கியம் படிக்கச் சொன்ன HM யோசனையைப் புறக்கணித்து அச்சிறுமி கணிதம் படித்ததாள். மத்திய அரசுத் துறையில் , கல்லூரி முடித்த சில மாதத்தில் பணி சேர்ந்தாள்.
இன்று இதன் மூலம் தன அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள்..
# ஆம் ....நான் தான் அச்சிறுமி.. ஒரே தவறுக்கு இருவித தண்டனைகளை பெற்றவள்..

ஆசிரியர் தினம் மட்டுமன்றி ஓவ்வொரு மழைதினமும் செல்வராணி டீச்சரை நினைவுப் படுத்தும்..... குடையும் செருப்பும் இல்லா காலத்தையும்.!
கல்வி மறக்கப் படலாம். !! காட்டப்பட்ட கருணை எப்படி மறக்கப்படும்?
புதிய கல்வியாண்டில் என் நண்பராய் அமைந்த அனைத்து கல்வியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. கருணையை கை விடாதீர்கள்.!!

ஊருக்குச் சென்ற கணவர்.

அடுப்பில் வழிந்தோடிய பால்..
அவனில் தீய்ந்துப் போன ரொட்டி..!
அவசர மறதியில் 
அணைக்க மறந்த மின்பெட்டி
பொசுக்கிய ஆடை ..!!
ஒலிக்கும் வாயிற்மணிக்கு
ஓடிக் களைத்த கால்கள்...
சாவி தெரியா சங்கடங்கள்.!

சின்னக் நினைவுறுத்தலும்
செல்லக் கோபங்களுமின்றி
வெறுமையாய் கழிந்த காலை!!
# ஊருக்குச் சென்ற கணவர்.

தாள்கள் .

கவிதை முதல் கணினி வரை!
கற்றல் தொடர்கிறது.
கற்றுக் கொள்ளா
கலையும் உண்டு ..காலம் நகர்கிறது.!
செலவழிக்கும் வித்தை !

சிறுதொகை தாண்டி
கைப்பையில் இருப்பதில்லை.
பயணங்களில்
“ எதற்கும் இருக்கட்டும்”என்றே

வற்புறுத்தும் பணத்தை
வாங்கிக் கொள்வேன்
வங்கியின் புதுத் தாளாய்..
பின் செலவழிப்பதுண்டு சிறுபிள்ளையாய்..

புத்தகமாய் , வார இதழாய் ..
குழந்தைகளுக்கு சாக்லேட் !
ஓட்டல் பரிமாறுவோருக்கு..
கார் நிறுத்த காவலாளிக்கு ..

யார் கேட்டாலும் .
மனமுவந்து ..மகிழ்வாய் !
புதிய தாள்கள்.

வயது முதிர்ந்த ஏழ்மை
ஒன்று ரயிலடியில் கை நீட்ட
புதிய பணம் நீட்டினேன்.
உற்றுப் பார்த்து சொன்னார்...
“ எங்கம்மா தந்தது...செலவழிக்காமல்
அம்மா நினைவாய் வைத்துக் கொள்வேன்.”

சற்றே சிலிர்த்தேன்.!
செலவழியாமல் அப்பணம் இருந்தால்...
அவர் நினைவில் நானிருப்பேன்
“ அம்மாவாய்” கொஞ்ச காலம்.!

வேலூர்- 111 டிகிரி.

வேலூர்- 111 டிகிரி.
--------------------------------------
கொதிக்கும் செங்கற்களை
இறக்கி அடுக்கும் தொழிலாளர்.

குழாய் பதிப்பு , கேபிள் பழுது
தகிக்கிற வெம்மையில்
தள்ளி வைக்க இயலா பணிகள்.

சிறு நிழலில் கடை விரித்த
நடை பாதை வணிகர்கள்!

அனற்கப்பும் குடை நிழலில்
வழிய வழிய காவலர் .

மூடிய துவாலையில்
குழந்தையின் முகம் மறைத்து
விரையும் பெண்.

உருகி வழியும் வெயிலில்
ஒத்தி வைக்க இயலா பணிகள்.

வேலூரில் 111 டிகிரி
வெயில்.!வெயில் .!வெயில் !

ஊடே
அனிச்சையாய்
“எல்லா கால்களிலும்
செருப்பிருக்கா?” என
கவனித்தே. .,கவலையாய்
நகரும் என் கண்கள் !
 — with Shah Jahan,

மகிழ்வில் ..

தங்கை வீட்டில் சின்ன விழா.

எங்கள் வீடு
உறவினர்களால் நிறைந்துள்ளது.
வீடு மட்டுமா
என் மனமும்.!

அடிக்கடி நிகழும் சந்திப்புகள்
என்றும போல் இனிமையாய் ..
திகட்ட திகட்ட மகிழ்வாய்..

வீடு சிரிக்கிறது
வீடு அதிர்கிறது..
வீடு நலம் விசாரிக்கிறது..
வீடு கட்டிக் கொள்கிறது..
வீடு ஈரம் கசிய புனனகைக்கிறது.

வீடு குழந்தைகளின் மழலை ரசிக்கிறது.!
விளையாடுகையில்
வீடு கவனத்தோடு பின் தொடர்கிறது..

அன்பையும் , பாசத்தையும்
அளவின்றி பரிமாறுகிறது.
கண் படப் போகிறதென்று
கவலைப் படுகிறது..

என் வீடு குலுங்குகிறது..
புலன்கள் புலப்படுத்தா
கீதத்தால்
என் வீடு நிறைகிறது.
 —

நேரம் நேரம்.!!

சிற்றலைகள்
சற்றே சிதைத்துச் செல்லும்

சடுதியில்
பேரலை ஒன்று
அழித்துச் கொள்ளும்.

அலை ஓய
கரையோரம்
காத்துக் கிடந்து

அற்புதமாய்
நான் குனிந்து எடுக்கையில்
நழுவிக் கொண்டு கடலில் விழும்...

இப்படித் தான்
இங்குமங்குமாய்
இறைந்தே இருக்கிறது
எனக்கே எனக்கான நேரம்.!

Way to Man's Heart.!

" Way to Man's heart is through his stomach" என்ற கருத்தில் உடன்பாடு
இருப்பவர் மேலே தொடருங்கள்.

இல்லையேல் அடுத்த நிலைத் தகவல் படிக்க இதைக் கடந்து விடலாம்.

"சமையல் " பெண்களின் உரிமை என்னும் தலைமுறையைச் சார்ந்தவள்.

ஆனால் திருமணம் வரை புத்தகமும் , கையுமாய் இருந்ததால் அன்று வரை என் சமையல் அறிவு சூன்யம்.

பின் தோழிகளிடம் , சகோதரிகளிடம், சித்தி, அம்மா , பாட்டி என தெரிந்தவர்கள் எல்லாரிடமும் நோட்டும் கையுமாய் உட்கார்ந்து ஒரு வழியாய் கொஞ்சம் கற்றுக் கொண்டேன்.

பிள்ளைகள் வளர , வளர இதில் பெரிய ஈடுபாடு வந்தது.

இந்த வரலாறு , பூகோளம் தவிர்த்து விடலாம்.

இப்போது ஓரளவு செய்கிறேன் என கருதுகிறேன்


அதற்கான ஒரு சின்ன டிப்ஸ் இங்கு. ..

என் வழி " மனதால் சமைத்து பார்த்து விடுதல்" அதாவது
"Cooking With the Mind"

எடுத்துக் காட்டாக நாளை காலை சமையல் இவை என் வைக்கலாம் .
"மிளகுப் பொங்கல், சட்னி
எண்ணெய் கத்தரிக்காய், கோஸ் பொரியல், ரசம், தயிர் சாதம் "

(காலையிலே இரண்டு வேளை சமையலும் நடக்கும், விடுமுறை நாட்கள் தவிர்த்து..)

முந்தின இரவு இதற்கான பொருட்களை இருக்கிறதா என பார்த்து
விடுவோம்.

அதன் பின் இந்த உணவுகளை மனக்கண் முன் கற்பனை செய்வேன் இப்படி.

மிளகும் முந்திரியும் விழித்துப் பார்க்கும் பொங்கல்.
வெள்ளை வெளேர் தேங்காய் சட்னி.
எண்ணெயில் சிரிக்கிற கத்தரிக்காய்
தேங்காய் பூ சூடிக் கொண்ட பொரியல்..
தெள்ளத் தெளிவான ரசம்
இஞ்சி, கொத்துமல்லி, கேரட் அலங்காரமாய் கொண்ட தயிர் சாதம்.

இப்படி முன்னிரவு மனக் கண்ணில் கண்ட உணவை
காலையில் சின்னதாய் பாடிக் கொண்டோ (!)
பாடல் கேட்டுக் கொண்டோ சமைத்து விடலாம், சுலபமாய்.

சமையலும் கவிதை போலத்தான்
கற்பனைக்கு எல்லையே இல்லைதான்

பின் குறிப்பு; இப்படி சமையல் முடித்தப் பிறகு தான் காமெடி இருக்கு. !
பிள்ளைகள் " இன்னும் கொஞ்சம் ' innovative, imaginative, colourful, tasty ஆக செய்ய கூடாதாம்மா / " என்பார்கள். இருக்கிற அத்தனை adjectives அடுக்குவார்கள் . சமாளித்தாகனும்.!

பயணங்கள்

பயணங்களில் 
ஏனோ நான்
உறங்குவதில்லை..!

பேருந்தில் சக பயணி 
தோளில் சரிய
மெல்ல விலக்கி விட்டு
உறங்கி விழும் முகங்களை
வேடிக்கை பார்ப்பதுடன் சரி.!

கணவரோ, பிள்ளைகளோ , ஓட்டுனரோ
மிதமான வேகத்தை
அறிவுறித்திக் கொண்டே செல்வேன்
கார் பயணங்களில்
உறக்கமில்லை. !

இரவுப் பயணம் ..
ரயிலின் தாலாட்டு
தூங்க வைப்பதில்லை.!

ஆனால்..
அப்பாவை இருகரத்தால்
பிடித்துக் கொண்டு
பின் இருக்கையில்
அமர்ந்தவுடன்
உறங்கி விழுந்ததும்

" தூங்க்காதமா" எனப்
பேச்சு கொடுத்து கொண்டே
ஒருகையால் என்னைப் பற்றி
சைக்கிளில் சென்றதும் ....
மட்காத நினைவுகளாய் .....
மனம் முழுக்க..மனம் முழுக்க.!

பரிணாமம்.

டாம் அண்ட் ஜெர்ரி..
டின் டின்...!
சிலந்தி மனிதன்..
விண்வெளி வீரர்..

பொன்மொழிகள் ...!
மோட்டர் பைக் .. கார்..

நடிகர் விஜய் படம்..!!
இன்று சே குவெரா ??

மாறும்
அறையின் படங்கள்...
மகனின்
பரிணாம வளர்ச்சி..!

அம்மா.!

அம்மா !
ஒற்றைச் சொல் உலகம்.
என் அம்மா திரேசம்மா என்றழைக்கைப் படும் திரேசா அருள்மணி.
எளிய குடும்பம். 
எதையும் இறைவன் கையில் ஒப்படிக்கும் அமைதியான அப்பா.
பெரிதாக ஆசைகளோ , கவலைகளோ இல்லா நீரோடை.!
ஆனால் அம்மா ?
கடல்!

கல்வி , திறமைகள் வளர்ப்பு ,
சமுக த்தில் சிறந்த இடம்.
சொல்லி சொல்லி வளர்க்கப் பட்டோம்.
இந்த உயரங்கள் , அம்மாவின் கனவும், தியாகமும்..

ஒரு கையில் அம்மா.
மறு கையில் புத்தகம்-என்
கணவர் கை பிடிக்கும்நாள் வரை.

அம்மா எனில்
கேட்கும் வரை காத்திருக்காமல்
ஓடி சென்று உதவும் குணம்.
அறிவால் ஆய்ந்து
அன்பால் முடிவெடுக்கும் திறன்.
உழைப்பே இன்றும் மந்திரம்.

காட்டன் சேலையும் ,
கதைப் புத்தகங்களும் உயிர்.
மணியன் கதைகளை மனப்பாடம் செய்தவர்.!

ஒரு புத்தகத்துக்கான செய்தி இருக்கு.
எதை சொல்ல , எதை விட.?

அம்மாவிடம் கற்றதை
மகளுக்கு கற்று தருகிறேன்.
" இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் "
தாய்மை உள்ளம் கொண்ட அனைவருக்கும்..!

அழகிய தருணங்கள்..!

சற்று தாமதமான பதிவு..
**********************
மகள் திருமண வரவேற்பின் போது புத்தகம் நினைவாக
தரலாம் என்று முடிவு செய்தது என் வீடு.

என் கவிதைகளையே தொகுத்து தரலாம் என்றதும்
அது கை தட்டி வரவேற்றது..
திருமண பட்ஜெட்டில் முதல் செலவாய்
"அம்மாவின் கவிதைத் தொகுப்பு" செலவு எழுதப்பட்டது.!

அதன்பின் ஒரு கூட்டு முயற்சியாய் பிறந்தது இத்தொகுப்பு.
கவிதைகளை தேர்ந்தெடுத்து, கணினியில் அடித்து ,ப்ரிண்ட் எடுத்து
எல்லாமே கணவரும், மகளும் பார்க்க , நான் வழக்கம் போல் ஜாலியாய் இருந்தேன். " அழகிய தருணங்கள்" இப்படி பிறந்தது.

இறுதிவரை ஆயிரம் திருமண வேலைகளுக்கிடை இதை கொணர்ந்தார் இவர். ! வரவேற்பில் எங்கள் GM வெளியிட்டார்.

இந்த 6 மாத காலத்தில் இந்த புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பு...
மிக மிக எளிமையான் கவிதைகள் தாம். ஆனால் கொடுத்த தருணம் லயிக்க வைத்தது.

அலுவலகத்தில், வெளியில், திருமணம் போன்ற விசேடங்களில், உறவினர் மத்தியில் . ஆலயம் சென்று திரும்புகையில் ,யாரேனும் என் கவிதையை பற்றி சொல்வார் . மிகுந்த நெகிழ்ச்சியாய் இருக்கும். WORKSHOP, OFFICIAL MEETING போது கூட இது நிகழும். தொலைபேசி அழைப்புகள் கணக்கில் தரவில்லை

என் ஓய்வு பெற்ற மாமா 4 பக்கத்திற்கு கவிதைகளை கவிதையால் பாராட்டி இருந்தார்.

முன்னுரையில் சொன்னது போல ...
" கல்வியும், குண நலன்களும் தாய் வீட்டுப் பெருமையாய்
எடுத்துச் செல்லும் மகளுக்கு இந்த கவிதைகளும் சீதனம்."

எனக்கோ, இங்கு வந்து வாழ்ந்ததெற்கென "ஒரு அடையாளம். "
 —

எந்தன்

என்று சொன்னேன் நினைவில்லை
எனக்கு பொம்மைகள் பிடித்தம் என்று,,?

ஐம்பதை தாண்டிய பிறந்த நாளிலும்
எனக்கான பரிசு பொம்மைகள்

தடுத்தால் கேட்காத கணவர்
அவருக்கேற்ற பிள்ளைகள்
அதனால்
சின்னச் சின்ன காரணத்திற்கும்
என்னைத் தேடி வரும் ஒரு பொம்மை .

சட்டைக்கார பார்பி
பட்டுசேலை அழகி
உயர் பட்டம் நான் வாங்கியதும்
சத்தம் போட்டு படிக்கும் குழந்தை..!

புன்னகை சிந்தும்
கண்மணிகள்.. .இவர் ..
சொல்லும்
கதைகள் தனித்தனி !

இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
இடைஇடையே பொம்மைகள்
இன்னும் குழந்தமை மாறா
எழிலோடு , அழகோடு
எந்தன் வீடு.
 —

ஒற்றைச்சொல்..

அறிமுகப் படுத்திக் கொள்கிறேன் ..
அன்றி 
அறிமுகப் படுத்தப் படுகிறேன்..
ஒவ்வொரு முறையும் ..
என் சுய விவர த்துடன் தான் .

ஏதும் இல்லை எனினும்
என் துறை பற்றியேனும்...
என் பணி பற்றியேனும்..
எப்படி இழப்பது அடையாளங்களை .?

மகளின் மருத்துவமனையில்
இன்று அறிமுகம் செய்தாள் .
" அம்மா "
அடையாளம் இல்லா அறிமுகம் !
ஒற்றைச் சொல்லில் ...

முதல் முறையாய் பிடிக்கிறது.

கதை கதையாம் .. காரணமாம்

இன்றைய பொழுது விடிந்தது ஒரு கதையின் தரிசனத்துடன்..

தங்கை வீட்டில் இரு குட்டிப் பெண்கள் .
விடுமுறை விட்டபின் ஒரே விளையாட்டு .

கொஞ்சம் ஆக்கப் பூர்வமாய் இருக்க
"ஒரு கறபனை கதை எழுத" முயற்சிக்க சொன்னேன் .

நல்ல கதைக்கு பரிசும் அறிவித்தேன் .

இரண்டு நாள் ஓடி விட்டது
இன்று காலையில் 3ஆம் வகுப்பு படிக்கும்
கேரன் கதையுடன் வந்து விட்டது.

அடுப்பை அணைத்து விட்டு அந்த கதையில் மூழ்கினேன் ..
தெரிந்த கதையை கொஞ்சம் மாற்றி
வேறு திசையில் கொண்டு சென்றிருந்தது .

கதையின் முடிவில் நீதி வேறு.. அழகோ அழகு.!
முத்தமிட்டு , சொன்ன பரிசும் தந்தபின் தான் அடுத்த வேலை !

என் நூலகத்தில் வைத்துக் கொள்வதாய் சொன்னதும்
குழ்ந்தைக்குப் பெருமையாகி விட்டது. .

குழந்தைகள் உலகம் தான் எத்தனை , அழகும் அற்புதமும் நிறைந்தது

அந்த உலகுள் சென்று திரும்பும் தருணங்களை நான தவற விடுவதில்லை ..

" என்னது கதையா?
பதிப்புரிமை வாங்கி பத்திரப் படுத்தியுள்ளேன்
வீட்டுக்கு வாங்க, படித்துக் காட்டுகிறேன் !! "
 — w