Monday, February 22, 2016

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!
உதட்டில் தெறித்த
சுட்ட எண்ணை ..
நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..
நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !
தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!
வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "
" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !
துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

Thursday, February 18, 2016

மோனா... மோனா..மோனா..."
பல்லவி...முதல் சரணம்

அதன் பின்
" நான் மெர்சலாயிட்டேன்.." 
இதில் பல்லவி , ஒரு சரணம்..

தொடர்ந்து
" ஊ...தா கலர் ரிப்பன்.."
பல்லவியை
மகள் இழுக்கையில்
பாப்பா தூங்கி இருந்தாள்..

தலைமுறைகள்
மாறும்போது
தாலாட்டும் மாறுகிறது
# ரியா

பின்னிரவில் 
துயில் கலைய
பீதியுடன்
அரையொளியில்
மனப்பலகையில்
பெருக்கியும்
வகுத்தும்
விரல் மடித்துக்
கூட்டியும்
விழி பிதுங்கச்
செய்யும்
விற்பனை இலக்குகள்!!
# "Marching" in March


இளம் பிராய
நினைவுகளின் அடுக்கில்
குருதி கசிய
வியாபித்திருக்கும
நீர்த் தேடல்

பொதுக் கிணறு
தெருக்குழாய்
ஆற்றங்கரைகளில்
பதிந்த
வெற்றுக்கால்களின்
தடங்கள்
விளம்பிடும்
வேதனைக்கதைகள்

அரிசியை
பருப்பைத் தாண்டியும
அம்மாக்களின்
முழு முதற் கவலை
அன்றன்றுக்கான
தண்ணீர்

இன்றும்
அடிப்பமபை
அடித்தடித்து
காய்த்துப போன
கரங்களில்
காயந்துக் கிடக்கிறது
அவர்களின
தண்ணீருக்கான
கண்ணீர்!
# உலக தண்ணீர் தினம்


உளம் வருடும்
மயிலிறகு நினைவுகளில்
உயிர்ப்புடன் இந்நாள்
நலமில்லா பொழுதின்
தலைக் கோதல் போலே
விரிக்கும் கரங்களில்
நீர்
குவிக்கும் மலர்களில்
தேடித்தேடி
முட்களைச் சேர்த்து
என்
தலையில் கவிழ்க்கிறேன்.

இலையோ சருகோ
குருத்தோ
எதுவென்ற போதும்
குறுக்கே பொருத்தி
சிலுவை அமைக்கிறேன்

வரமென வந்தவற்றின்
குறைகளை
ஆய்ந்தே
வாழ்க்கை கடக்கிறது.!

ஆயினும
உடன்
நீர்
இருக்கும்
உணர்வினிலே
உள்ளம் நிறைகிறது


பிராயத்தில சேமித்த 
ப்ரியங்கள்
வார்த்தையில் மட்டுமா?
வழி நெடுக 
வாழ்க்கையெல்லாம்!


செல்லமாய்
கவியத் துவங்கும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்

#புகைவண்டிக் கவிதை
கடந்துச் செல்லும்
புன்னகை
ஒன்று
கரைக்க
யத்தனிக்கிறது
காத்திருத்தலின்
களைப்பை .!


அலைகளில் 
அலைந்து
கடுங்காற்றில்
கலைந்து
திசை தேடி
திசை தேடி
பயணம்
துவங்கிய
கரையில்
தரை தட்டி
நிற்கும்
எனது படகு


அழகென்பது
அணிகலனிலா?
நெற்றிியில் 
அறிவும்
நெஞ்சில் 
துணிவும்
நேர்மை
உழைப்பைச்
சூடிய பெண்மை
எந்நாளும் அழகே


பரணிலும்
இடமற்ற
பயன்பாடற்ற
பாண்டங்கள்
வழக்கொழிந்த 
சுளகுகள்
ஓங்கி
உரைப்பதெல்லாம்
இன்று
உச்சியில்
உள்ளதெல்லாம்
நாளை
குப்பையில்.!


கோரைப் பாயை
ஊடுருவும்
மண்தரையின் ஓதம்

நடுக்கும் குளிரை 
அதிகமாக்கும்
அம்மாவின்
பழஞசேலை

மரத்து விறைத்த
விரல்களை
இயல்பாக்க
விறகடுப்பின
கங்குகள்

தாழ்வார க்மபியில்
இரவெல்லாம்
தண்ணீர் சொட்டும்
ஒற்றைச் சீருடை
உடல் சூடடில் உலர

எதற்கும் மேலாய்
மசி எழுத்துகள்
கலைந்த
பதிவேடு

பள்ளி காலத்து
மழை
அழைத்து வரும்
அழுத்தங்கள்

இன்று கவிதைதனை
தந்தாலும்
அன்று கவலைகளை


சென்னையில்

அழைப்பு மணியை 
அழுத்தும் முன்
கண்ணில் 
தென்படும் 
சின்னஞ்சிறு 
காலணிகள்
கட்டியம் கூறும்
உள் சென்று
சுகிக்கவிருக்கும்
இனிமைதனை

சென்னையில்
இரண்டாம் நாள்!
பயணங்கள் முடிவதுண்டு..
நினைவுகளை 
நெஞ்சில் நிறைத்து

கப்பலுக்கும் , படகுக்கும் மாற
நான் தடுமாறுகையில்
கை கொடுத்த
கைகள்

அம்மாவின் இடுப்பிருந்து
என் கண் பார்த்து
சிரித்த பொக்கை வாய் பாப்பா

கடலில் நனைந்த
உடைமாற்ற
இடம் தந்த
கடைக்கார பெண்மணி

பெட்டி தூக்க
சமைக்க
பரிமாற
அறை சுத்தம் செய்ய
என
நீண்ட உதவிக்கரங்கள்

வாழ்க்கை போலவே
மனிதரைச் சார்ந்தே
பயணங்களும்

நலமுடன் திரும்பி
வழக்கங்களுக்கு மாறியாச்சு

# அந்தமான் பயணப்பதிவு 20
இப்போதைக்கு
முற்றும்


பின்னிரவில் விரலகள்
பிணைத்த நேரம்

அழகிய 
சொல்லொன்று 
சொல்லெனறேன்

நாம் என்றாய்

பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்

இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்

அடடா


அன்பெனபதே 
அணிகலனாய்
அன்பென்பதே
படைக்கலனாய்
அன்பென்பதே 
பலமாய் ,
அன்பென்பதே
வரமாய்
அன்பென்பதே
இடறி விழும்
பலவீனமாய்
அன்பென்பதே
அனைத்துமாய்
ஆனதிந்த வாழ்வு