Sunday, June 16, 2013

கருணை .

கதையல்ல ..நிஜம்..
ஒரு தவறு ....இரு தண்டனைகள் !!
எங்கள் பள்ளி , கல்வி, கட்டுப்பாடு, ஒழுக்கம் ..எப்போதும் முன்னணியில்...
ஒரு சிறுமி அப்போது வேலூர் சுற்றியிருக்கும் சிற்றூரில் இருந்து படித்தாள்.
5 கி.மீ நடந்து வந்துப் படித்தாள். ஆனால் மிக நன்றாகப் படிப்பாள்.. கவிதை, கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசு வாங்கி விடுவாள்.

ஒரு நாள் காலை சரியான மழையில் , நனைந்தே வந்து சேர்ந்தாள்..பள்ளிக்கு தாமதம்.

கண்டிப்பிற்கு பெயர் போன H.M சிஸ்டர் பாரபட்சமின்றி ...
..”போய் இண்டர்வல் வரை வகுப்பில் பின்னால் நில்”
சொட்ட சொட்ட நனைந்து , . கைகள் விறைத்து , உடல் நடுங்கி... நின்றுக் கொண்டே ..
இரண்டாவது பீரியட் துவங்கியது.
செல்வராணி டீச்சர் வகுப்பு..முதற் கேள்வி “ ஏன் நிற்கிறாய்?”

விவரம் தெரிந்ததும் கடும் கோபத்துடன் கட்டளை பிறப்பித்தார்.
விடுதிக்கு அனுப்பி , உடை மாற்றி, டீ குடிக்க செய்து அமரவும் வைத்தார்.
சற்று நேரத்தில் வகுப்புக்கு வலம்வந்த H.M சிஸ்டர் கடுமையாய் டீச்சரைக் கண்டித்தார்.எங்கள் கண் முன்.!
கவலையே படவில்லை டீச்சரின் கருணை !


அதே பள்ளி , அதே மாணவி.. வேறு வருடம்.. வேறு HM.
மீண்டும் கால தாமதமாய் ..
இம்முறை தண்டனை “ இதுவரை நடத்தா English Poetry யைப் படித்து ஒப்புவித்து விட்டு செல்.?
அடுத்த நிமிடமே அந்த சிறுமி புத்தகத்தை கொடுத்து ஒப்புவிக்க..
“ வேறேது படிக்கவில்லை சொல்?” என
“ புத்தகம் வாங்கிய உடன் எல்லா English poetry யும் மனப்பாடம் செய்தேன் எதையும் கேளுங்கள்”

“ ஓடு ஓடு.. வகுப்பிற்கு” என்ற HM இடைவேளையில் மீண்டும் அச்சிறுமியை வரவழைத்தார்.
“ ஆங்கில இலக்கியம் எடுத்துப் படி. உனக்கு ஆர்வம் இருக்கிறது..” இது HM..“தமிழ் செய்யுட்களையும் நடத்தும் முன் படித்து வைத்திருக்கேன் “ என்றாள் சிறுமி.

இலக்கியம் படிக்கச் சொன்ன HM யோசனையைப் புறக்கணித்து அச்சிறுமி கணிதம் படித்ததாள். மத்திய அரசுத் துறையில் , கல்லூரி முடித்த சில மாதத்தில் பணி சேர்ந்தாள்.
இன்று இதன் மூலம் தன அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள்..
# ஆம் ....நான் தான் அச்சிறுமி.. ஒரே தவறுக்கு இருவித தண்டனைகளை பெற்றவள்..

ஆசிரியர் தினம் மட்டுமன்றி ஓவ்வொரு மழைதினமும் செல்வராணி டீச்சரை நினைவுப் படுத்தும்..... குடையும் செருப்பும் இல்லா காலத்தையும்.!
கல்வி மறக்கப் படலாம். !! காட்டப்பட்ட கருணை எப்படி மறக்கப்படும்?
புதிய கல்வியாண்டில் என் நண்பராய் அமைந்த அனைத்து கல்வியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.. கருணையை கை விடாதீர்கள்.!!

No comments:

Post a Comment